Tuesday 4 August 2015

"பேய் ஓட்டும்" பெண் கொலை -அசாம்

"பேய் ஓட்டும்" பெண் கொலை -அசாம்
பேய் ஓட்டும் வேலைகளில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் 63 வயதுப் பெண் ஒருவரை, நிர்வாணமாக்கி தலையைத் துண்டித்த சம்பவம் அசாம் மாநிலத்தில் நடந்துள்ளது.அசாமின் சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பலருக்கு உடல் நலக் குறைவு எற்பட்டதையடுத்து, பூர்ணி ஓரங்தான் அதற்குக் காரணம் என்று நினைத்தனர். பிறகு அவரை சூனியக்காரி என்று குற்றம்சாட்டி, கொலைசெய்தனர் என அம்மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி சமத் ஹுசைன்  தெரிவித்தார். இந்தக் கொலை தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் இம்மாதிரி குற்றச்சாட்டுகளின் பேரில் கிட்டத்தட்ட 90 பேர் தலை துண்டிக்கப்பட்டோ, உயிருடன் எரிக்கப்பட்டோ, கத்தியால் குத்தியோ கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அசாமில் பழங்குடியினர் மத்தியிலும் தேயிலைத் தொழிலாளர்கள் மத்தியிலும் பெண்களை பேய் பிடித்திருப்பதாக குற்றம்சாட்டுவது வழக்கமாக இருக்கிறது. கடந்த ஆக்டோபர் மாதம் இந்தியத் தடகள வீராங்கனையான தேவ்யானி போராவை சூனியக்காரி என்று குற்றம்சாட்டி கடுமையாகத் தாக்கினர்.  இம்மாதிரி தாக்குதல்களுக்குப் பின்னணியில் பெரும்பாலும் மூடநம்பிக்கையே காரணமாக இருக்கிறது என்றாலும், சிலர் - குறிப்பாக விதவைகள் - அவர்களது சொத்துக்களுக்காகக தாக்கப்படுவதும் உண்டு என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.